வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

TNPSC GROUP-I : சங்க காலம் ஒரு பார்வை Exam Materials Free Download Part II

சமயம்

ஆவிகளின் மீது நம்பிக்கை கொண்ட ஆவி உலகக் கோட்பாடும் (Animism), குலக்குறி (Totem) வழிபாடும் மூத்தோர் வீரர் வழிபாடும் சங்க காலச் சமயத்தில் செல்வாக்கு செலுத்தின. போரில் இறந்துபட்ட வீரர்களுக்கு நடுகல் கட்டி வழிபடும் நடுகல் வழிபாடு பரவலாக இருந்தது. கடிமரம், காவல்மரம் என்ற பெயரில் குறிப்பிட்ட மரங்கள் புனித மரங்களாகக் கருதப்பட்டன. பாம்பு வழிபாடும் வழக்கிலிருந்தது. திருமால், முருகன், கொற்றவை ஆகியன சங்க காலத்தில் முக்கிய தெய்வங்களாக விளங்கின. இன்று பரவலாக உள்ள பிள்ளையார் வழிபாடு சங்க காலத்தில் இல்லை. சிவனைப் பற்றிய குறிப்புகள் சங்க நூல்களில் இடம் பெற்றாலும் மேற்கூறிய தெய்வங்களைப் போல் செல்வாக்கு பெற்றிருக்கவில்லை. வாலியோன் என்ற பெயரில் பலராமர் வழிபாடு இருந்துள்ளது. சமணம், பௌத்தம் ஆகிய வடபுல சமயங்கள் வழிபாடு பரவின. வடமொழித் தாக்கத்தின் விளைவாக வேள்விகள் நிகழ்ந்தன. சங்க கால கவிஞர்கள் சிலர் இவ்விரு சமயங்களையும் தழுவி யிருந்தனர். இவ்வுலக வாழ்க்கையை வெறுத்தொதுக்கும் நிலையாமைக் கோட்பாடு செல்வாக்குப் பெறவில்லை. வாழ்க்கை உவப்புக் கொள்கையே மேலோங்கியிருந்தது.

பொருளியல்

நாட்டின் அடிப்படைத் தொழிலாக வேளாண்மை அமைந்தது. மருதநிலப் பகுதியில் நெல்லும், கரும்பும் பயிர் செய்யப்பட்டன. எள், கொள், துவரை ஆகியன குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகளில் பயிர் ஆயின. சாமை, வரகு, திணை ஆகியன முக்கிய புன்செய் நிலப் பயிர் களாகும். தேனெடுத்தல், கிழங்குகளை அகழ்ந்தெடுத்தல், மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் ஆகியன ஏனைய பொருளாதார நடவடிக்கைகளாகும். நெசவு, கொல்வேலை, தச்சு வேலை, கருப்பஞ்சாற்றிலிருந்து வெல்லம் எடுத்தல், சங்கறுத்தல், கூடை முடைதல் ஆகியன முக்கிய கைதொழில்களாக அமைந்தன. பண்டமாற்று முறையில் வாணிகம் நிகழ்ந்தது. பெரிய நகரங்களில் அங்காடி என்ற பெயரில் சந்தைகள் இருந்தன. பகற்பொழுதில் செயல் படுபவை நாளங்காடி என்றும், இரவு நேரத்தில் செயல்படுபவை அல்லங்காடி என்றும் அழைக்கப்பட்டன.  பொருட்களைக் கொண்டு செல்ல எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகள் பயன்பட்டன. வணிகர்கள் சாத்து என்ற பெயரில் குழுக்களாகச் செயல்பட்டனர். மிளகு., அரிசி, இஞ்சி, ஏலம், மஞ்சள், இலவங்கம் ஆகிய உணவுப் பொருட்களும் சந்தனம், அகில் ஆகிய மணப்பொருட்களும் தமிழகத்திலிருந்து அரேபியா, எகிப்து, உரோம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. குரங்கு, மயில், யானைத்தந்தம், முத்து ஆகியனவும் ஏற்றுமதியாயின. கடல் வாணிகத்திற்குப் பாய்கள் கட்டப்பட்ட மரக்கலங்கள் பயன்பட்டன.

இலக்கணம்

தமிழ் மொழி தொன்மையான நூலாக இன்று நம் பார்வைக்குக் கிட்டுவது தொல்காப்பியமாகும். தனக்கு முன்னால் வாழ்ந்த நூலாசிரியர்களின் நூல்களை கற்றுத் தேர்ந்து தொல்காப்பியர் இந்நூலை உருவாக்கியுள்ளார். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பிரிவுகளாக இந்நூல் அமைந்துள்ளது. பொதுவாக மொழிகளின் இலக்கணம் என்பது எழுத்து, சொல் யாப்பு சார்ந்ததாக மட்டுமே இருக்கும். ஆனால் தொல்காப்பியம் இவை மூன்றுடன் மட்டுமன்றி மனித வாழ்க்கையின் இலக்கணத்தை உணர்த்தும் வகையில் பொருளதிகாரம் என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளது.

இலக்கியம்



தமிழ் இலக்கியத்தின் பொற்காலமாக சங்க காலம் அமைந்தது. இக்காலத்தில் தோன்றிய பெரும்பான்மைப் பாடல்கள் எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்ற பெயரில் பிற்காலத்தில் தொகுப்பு நூல்களாகத் தொகுக்கப்பட்டன. 1. நற்றிணை, 2. குறுந்தொகை, 3. ஐங்குறுநூறு,  4. பதிற்றுப்பத்து, 5. பரிபாடல், 6. கலித்தொகை, 7. அக நானூறு, 8. புறநானூறு என்ற எட்டு நூல்களும் எட்டுத்தொகை என்ற தொகுப்பில் அடங்குகின்றன. இந்நூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பல்வேறு கவிஞர்களால் பல்வேறு கால கட்டங்களில் பாடப்பட்டவை. திருமுருகாற்றுப்படை, 2. பொருநராற்றுப்படை, 3. சிறு பாணாற்றுப்படை, 4. பெரும்பாணாற்றுப்படை, 5. முல்லைப் பாட்டு, 6. மதுரைக் காஞ்சி, 7. நெடுல்வாடை, 8. குறிஞ்சிப் பாட்டு, 9. பட்டினப்பாலை, 10. மலைபடுகடாம் என்ற பத்து நூல்களும் பத்துப்பாட்டு எனப் பெயர்  பெற்றன. இவற்றுள் திருமுருகாற்றுப்படையும், நெடுநல் வாடையும் நக்கீரராலும், எஞ்சிய எட்டு நூல்களும் எட்டு கவிஞர்களாலும் இயற்றப்பட்டன. இவ்விலக்கியங்களின் தனிச்சிறப்பு இவை அகம் புறம் என்ற பொருள் பாகுபாடுகளைக் கொண்டிருப்பதாகும். மனிதர்களின்            அகம் (மனம்) சார்ந்த காதல் தொடர்பான செய்திகளைக் கூறுவது அகத்திணை ஆகும். இதற்குப் புறத்தேயுள்ள கல்வி, வீரம், கொடை, நீதி அறமல்லன போன்றவற்றைக் குறிப்பது புறத்திணையாகும். அகநூல்களில் தொல் காப்பியர் விதியை சங்க காலக் கவிஞர்கள் உறுதியாகக் கடைபிடித்தனர்.

சங்க காலத்தை அடுத்து வரும் காலம் சங்கம் மருவிய காலம் எனப்படும். இக்காலத்தில் உருவான எதினெட்டு நூல்கள் பதிணென் கீழ்க்கணக்கு எனப் படுகின்றன. இவற்றுள் திணைமாலை நூற்றைம்பது ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை ஐம்பது, கார் நாற்பது, கைந்நிலை என்ற ஆறு நூல்களும் சங்க கால அகத்திணைமரபு சார்ந்தவை. எஞ்சிய நூல்களில் திருக்குறள் தவிர்ந்த நாலடியார், பழமொழி, ஏலாதி, திரிகடுகம், நான்மணிக்கடிகை, ஆசாரக் கோவை, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், முதுமொழிக் காஞ்சி என்ற பதினொறு நூல்களும் புறத்திணை சார்ந்தவை. குறள் அகமும், புறமும் சார்ந்த நூலாகும்.

பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் தலையான இடத்தைப் பெறுவது திருக்குறள். 1330 குறள் வெண்பாக்களைக் கொண்ட இந்நூல் அறம் பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. எச்சமயத்தையும் சாராது வாழ்வியல் நெறிகளைக் கூறுவது இதன் தனிச்சிறப்பாகும். சங்க காலத்தில் வாழ்வியலின் பகுதியாகக் கருதப்பட்ட கள்ளுண்டல், பரத்தையற் பிரிவு, புலால் உண்ணுதல், சூதாடல் ஆகியன வள்ளுவரால் கடிந்தொதுக்கப்படுகின்றன. திருக்குறளுக்கு அடுத்த இடத்தைப் பெறும் நாலடியார் சமண முனிவர்கள் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பாகும். இந்நூல் குறளுக்கு மாறாக உலகியல் வாழ்க்கை மீது வெறுப்பை வெளிப்படுத்தி துறவறத்தை வற்புறுத்துகிறது. இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்ற இரு நூல்களும் வைதீக சமயச் சார்பானவை. ஒழுக்கங்களின் தொகுதி என்ற பொருளைத் தரும் ஆசாரக் கோவை என்ற நூல் வடமொழி நீதிநூல்கள் சிலவற்றின் சாரமாக அமைகின்றது. பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகியன சமணம் சார்ந்து நீதி கூறுகின்றன.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...