வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

டி.என்.பி.எஸ்.சி ஆபீஸில் இருந்து வினாத்தாள் லீக் ஆனதா? அச்சகத்தில் இருந்து அவுட் ஆனதா? விசாரணை

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு வினாத்தாள் எப்படி வெளியானது? என்பது தொடர்பாக தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஈரோட்டில் சிக்கிய 4 பேர்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 பதவிகளுக்கான தேர்வை ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தியது. அப்போது ஈரோட்டில் தேர்வு எழுதிய தனக்கொடி என்பவர் மூலமாக வினாத்தாள் அவுட் ஆன விவரம் தெரியவந்தது. அவரும் அவரது கணவர் செந்திலும் தேர்வு எழுதியவர்களுடன் சேர்ந்து ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகாரும் கொடுத்தனர்.
அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் தனக்கொடியும் அவரது கணவர் செந்திலும் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களைத் தெரிவித்ததால் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இருவரும் ஈரோடு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நாமக்கல் மாவட்டம் வெப்படையைச் சேர்ந்த சுதாகரிடம் வினாத்தாளை விலை கொடுத்து வாங்கியதாக ஒப்புக் கொண்டனர்.

பின்னர் சுதாகரிடம் நடத்திய விசாரண்ணையில் ஈரோடு மாவட்டம் மைலம்பாடியைச் சேர்ந்த வரதராஜனுக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தங்களுக்கு இ மெயில் மூலம் வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டார்.
தருமபுரி, திருவண்ணாமலையில் சிக்கிய 3 பேர்
இதனிடையே தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் குரூப்-2 தேர்வு எழுத வந்த சுரேஷ்குமார் என்பவர் வெள்ளைப் பேப்பருடன் தேர்வு மையத்துக்குள் நுழைந்திருக்கிறார். அவரிடம் வெள்ளைப் பேப்பரை கண்காணிப்பாளராக வந்திருந்த அரூர் துணை வட்டாட்சியர் கருப்பசாமி வாங்கிக் கொண்டு தேர்வு எழுத அனுமதித்தார்.
யதேச்சையாக அந்த வெள்ளை பேப்பரை புரட்டிப் பார்த்த அதிகாரி கருப்பசாமிக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. அது குரூப் 2 தேர்வுக்கான வினா விடைகள் முழுவதும் அதில் எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து கம்பைநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தேர்வு எழுத வந்த சுரேஷ்குமாரிடம் விசாரணை நடத்தியதில் முத்தானூர் அருண் மற்றும் பூபேஸ் ஆகியோருடன் சேர்ந்து ரூ3 லட்சத்துக்கு திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி ஆசிரியர் விவேகானந்தனிடம் வினாத்தாளை மற்றொரு ஆசிரியர் ரங்கராஜ் மூலம் வாங்கியதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து தனிப்படை போலீசார் ஆசிரியர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களுடன் சுரேஷ்குமாரையும் கைது செய்து அரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தலைமறைவாக உள்ள அருண், பூபேஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
எப்படி வினாத்தாள் அவுட் ஆனது?
இதேபோல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வினாத்தாள் அவுட் ஆகி இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆனால் வினாத்தாள் எப்படி அவுட் ஆனது என்பதுதான் இன்னமும் தெரியவில்லை.
டி.என்.பி.எஸ்.சி. தலைமை அலுவலக பணியாளர்கள் யாரேனும் ஸ்கேன் செய்து இந்த வினாத்தாளை அவுட் ஆக்கும் முறைகேட்டில் ஈடுபட்டனரா? அல்லது வினாத்தாள் அச்சடிக்கப்பட்ட அச்சகத்தில் இருந்து இந்த வினாத்தாள்கள் அவுட் ஆனதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைதான 7 பேரின் மின்னஞ்சல் முகவரிகளும் பெறப்பட்டு தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...