வள்ளுவர் கூறாத அறம்
கள்ளுண்ணாமையில் – சங்க அகப்பாடல்கள்
கள்ளுண்ணாமையில் – சங்க அகப்பாடல்கள்
ஆக்கத்தைக் கெடுக்கும்
பிறர் கொடுமை தாங்காமல் அதை மறத்தற்காகக் கள்ளுண்ணல் என்பது சங்ககாலம் முதல் நிகழ்ந்து வருகிறது. அதற்காகக் கள்ளுண்டால் அது கொடுமை செய்வாரிடம் அக் கொடுமையை உணர்த்தித் திருத்தவோ , அதனால் நமக்கு வந்த துன்பத்தைப் போக்கவோ செய்யாமல், நம் ஆக்கத்தைக் கெடுக்கும் என்ற கருத்தையும் அக இலக்கியங்கள் உணர்த்துகின்றன.
சங்ககாலத்தில் கணவனின் பரத்தைமைக் கொடுமையை மறத்தற்காக பெண்கள் கள் குடித்தனர் . ஆனால் ஒரு தலைவி அதற்காக கள் குடிக்காமல் , பரத்தைமை கொண்டாலும் தலைவன் உயிர் வாழ்வது தன் அருளால் தான். எல்லை மீறும் போதும் போது பரத்தைமையைக் கைவிட்டுத் தலைவனைத் தன்னோடு கொண்டு வரமுடியும் என்று உறுதியாகக் கூறுகிறாள் (அகநானூறு- 336 ) .
”தன் பறலோடு வதியும் பெண் நீர் நாயின் பசியைத் தீர்ப்பதற்காக ஆண் நீர் நாய் குளத்திலுள்ள வாளை மீனைக் கவ்வி குளத்தைக் குழப்புகிறது. குளம் குழம்பியதால் நீர் எடுக்க வந்த மகளிர் நீர் எடுக்காமல் (நீர் நாய் போல நம் கணவன் தமக்காக வாழவில்லையே என்று) தலைவன் கொடுமையை நினைத்துக் கள் குடித்துப் பரத்தமையைப் பாடி குரவை அயர்கின்றனர்.
(ஆனால் நான் கள் குடித்துப் புலம்ப மாட்டேன்). தலைவனின் தேர் தர வந்த பரத்தை மகளிர் என் நலனை ஏசுகின்றனர். யானைப் பாகன் உயிரோடு வாழ்வது அவன் அடக்கி வைத்துள்ள யானை அருளுவதால் தான் . அதுபோல நான் அருளியதால் தான் தலைவனும் அவனைச் சுற்றிள்ள பரத்தையரும் வாழுகின்றனர்.