வள்ளுவர் கூறாத அறம்
கள்ளுண்ணாமையில் – சங்க அகப்பாடல்கள்
கள்ளுண்ணாமையில் – சங்க அகப்பாடல்கள்
ஆக்கத்தைக் கெடுக்கும்
பிறர் கொடுமை தாங்காமல் அதை மறத்தற்காகக் கள்ளுண்ணல் என்பது சங்ககாலம் முதல் நிகழ்ந்து வருகிறது. அதற்காகக் கள்ளுண்டால் அது கொடுமை செய்வாரிடம் அக் கொடுமையை உணர்த்தித் திருத்தவோ , அதனால் நமக்கு வந்த துன்பத்தைப் போக்கவோ செய்யாமல், நம் ஆக்கத்தைக் கெடுக்கும் என்ற கருத்தையும் அக இலக்கியங்கள் உணர்த்துகின்றன.
சங்ககாலத்தில் கணவனின் பரத்தைமைக் கொடுமையை மறத்தற்காக பெண்கள் கள் குடித்தனர் . ஆனால் ஒரு தலைவி அதற்காக கள் குடிக்காமல் , பரத்தைமை கொண்டாலும் தலைவன் உயிர் வாழ்வது தன் அருளால் தான். எல்லை மீறும் போதும் போது பரத்தைமையைக் கைவிட்டுத் தலைவனைத் தன்னோடு கொண்டு வரமுடியும் என்று உறுதியாகக் கூறுகிறாள் (அகநானூறு- 336 ) .
”தன் பறலோடு வதியும் பெண் நீர் நாயின் பசியைத் தீர்ப்பதற்காக ஆண் நீர் நாய் குளத்திலுள்ள வாளை மீனைக் கவ்வி குளத்தைக் குழப்புகிறது. குளம் குழம்பியதால் நீர் எடுக்க வந்த மகளிர் நீர் எடுக்காமல் (நீர் நாய் போல நம் கணவன் தமக்காக வாழவில்லையே என்று) தலைவன் கொடுமையை நினைத்துக் கள் குடித்துப் பரத்தமையைப் பாடி குரவை அயர்கின்றனர்.
பரத்தையரோடு அவன் துணங்கை ஆடும் இடத்திற்கு நான் சென்றால் அவனை என்னோடு திரியச் செய்வேன். இல்லையெனில் (திருமணத்தின் போது தன் நேரிறை முன் கை பற்றி அணிவித்த வளையல்) என் நேரிறை முன் கையில் விளங்கும் வளையல் உடைவதாக.” என்று தெளிவாக வஞ்சினம் கூறுகிறாள்.
இதில் தலைவி கூற்று வழியாக
1. ஆண் நீர்நாய் போலத் தனக்குத் தன் தலைவன் அருளவில்லையே என்று அவன் கொடுமைக்கு வருந்தி பிற மகளிரைப் போலக் கள் குடித்துப் பரத்தைமையைப் பாடிப் புலம்புதல் கூடாது . 2. தலைவனின் பரத்தைமைக்காக பிற மகளிரைப் போல வருந்தாது, யானைப் பாகன் உயிரோடு வாழ்வது அவன் அடக்கி வைத்துள்ள யானை அருளுவதால் தான் .அதுபோல அவன் பரத்தைமை தன் அருளாலேயே தொடருகிறது என அவன் பரத்தைமையை அலட்சியப்படுத்த வேண்டும். 3. அது சொல்லளவில் இல்லாமல் மனதளவிலும் உறுதி பெற்றுத் தன் ஆக்கத்திற்கு வழி வகுக்க வேண்டும். அதனால் தான் தன் நேரிறை முன் கை வளையள் கழன்று விடாமல் செறிவாக உள்ளது. 4. அவன் பரத்தைமை ஒழுக்கம் மிகுந்து பரத்தையர் தன்னை ஏசும் போது ”நான் அருளுகிறேன்” என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளாமல் , தன் ஆக்கத்திற்கு வழி வகுக்கும் வகையில், அவன் இருக்குமிடத்தை அடைந்து அவனைத் தன்னோடு திரியச் செய்வேன் ‘ என்ற உறுதியோடு அவனிருக்குமிடம் அடையத் துணிதல் வேண்டும். அதாவது அவன் பரத்தைமையை நீக்க வேண்டும். 5. அவன் வராதபோது அவன் அணிவித்த வளையளை உடைத்தெறிந்து அவனை விட்டு நீங்கவும் தயங்குதல் கூடாது. அல்லது நீங்குவேன் என்று கூறவும் தயங்குதல் கூடாது.
என்ற ஆக்கச் சிந்தனைகளை ஆசிரியர் பாவைக் கொட்டிலார் குறிப்பிடுகிறார்.
இவ்வளவும் தலைவன் பரத்தமைக் கொடுமை கண்டு கள் குடிக்காது சிந்தித்ததாலேயே தோன்றுகிறது. கள் குடித்திருந்தால் நீர்நாய் போன்ற பிற குடும்பங்களைக் காணும் தோறும் கள் குடித்துக் குடித்தே ஆக்கமின்றி அழிய நேரிடும் என்று கள்ளுண்ணாமையை அறிவுறுத்துகிறார்.
முடிவுரை
மேற்குறிப்பிட்டவற்றால், சமண பௌத்த சமயங்கள் கள்ளுண்ணாமையைத் தனி அறமாக வலியுறுத்தினாலும் சங்க அக இலக்கியங்களும் அதைச் சமூக வாழ்வியல் ஒழுக்கமாகக் கூறுகின்றன. அவை பதினெண் கீழ்க்கணக்கு அற இலக்கியங்களில் சுட்டப்படாத கருத்துக்களாயும் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. சான்றாக 1.கள்ளுண்ணல் குறியா இன்பம்; 2. ஒருவன் தான் அடைய கருதிய பொருளையும் அதன் சுற்றத்தையும் அழிக்கும் நிலையைக் கள்ளுண்ணல் உண்டாக்கும்; 3. கள்ளுண்ணல் ஒருவரின் ஆக்கச் சிந்தனையைக் கெடுக்கும்; ஆகிய கருத்துக்கள் வலியுறுத்தப் படுகின்றன. மேலும் ஆராய மிகுதியான அக இலக்கியப் பரப்பும் உள்ளது
No comments:
Post a Comment