போட்டித் தேர்வு மூலம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2 ஆயிரத்து 895 பேரை தேர்வு செய்து வெளியிட்ட பட்டியலை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
நிபுணர் குழு சமர்ப்பித்த முக்கிய விடைகள் அடிப்படையில் அனைத்து விடைத்தாள்களையும் மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 2,895 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு மே மாதம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர். போட்டித் தேர்வுக்கான முக்கிய விடைகளும், தேர்வு பெற்றவர்களின் பட்டியலையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதில் பல முக்கிய விடைகள் தவறாக உள்ளதாகக் கூறி தேர்வர்கள் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இந்தத் தேர்வில் விடைத்தாள்கள் முறையாக மதிப்பீடு செய்யப்படவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய விடைகள் பல தவறானவை. அவற்றை அடிப்படையாக வைத்து விடைத்தாள்களும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இதனால் சரியாக விடையளித்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இடஒதுக்கீடு முறையையும் சரியாக பணி நியமனத்தில் பின்பற்றவில்லை என்று மனுக்களில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் நீதிபதி எஸ். நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு விடைகளை ஆராய்வதற்காக நிபுணர் குழு ஒன்றை அமைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் திங்கள்கிழமை (அக்டோபர் 1) விசாரணைக்கு வந்தது. அப்போது, நிபுணர் குழுவின் அறிக்கையை ஆராய்ந்த நீதிபதி எஸ். நாகமுத்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட தேர்வுப் பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டார்.
நீதிமன்ற தீர்ப்பு முழு விவரங்களை அறிய இங்கே சொடுக்கவும்.
http://judis.nic.in/judis_chennai/qrydisp.aspx?filename=39189
No comments:
Post a Comment