வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

பாண்டியர் காலம் (கி.பி. 13-ஆம் நூற்றாண்டு) & விஜயநகர பேரரசு (கி.பி. 14- 16) TNPSC GROUP I Materials Download

பாண்டியர் காலம் (கி.பி. 13-ஆம் நூற்றாண்டு)

சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருவான பாண்டியப் பேரரசு சோழப் பேரரசைப் போன்றே மண்டலம், நாடு, கூற்றம் ஆகிய ஆட்சிப் பிரிவுகளைக் கொண்டிருந்தது. பல்லவர் காலத்தைப் போன்றே சோழர் காலமும் வேளாண்மையை மையமாகக் கொண்ட பெருமளவிலான கிராமங்களை அடிப்படை அலகாகக் கொண்டிருந்தது. வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. நெசவு, எண்ணெய் எடுத்தல், வெல்லம் தயாரித்தல், உப்பு விளைவித்தல் தொழில்கள் நிகழ்ந்தன. பாண்டியர் ஆட்சியில் சிறப்புமிக்க தொழிலாக முத்து குளித்தல் விளங்கியது. உரோம் நாட்டிற்கு இம்முத்துக்கள் ஏற்றுமதியாக தங்கத்தைக்  கொண்டு வந்தன. மார்கோபோலோ என்ற இத்தாலி நாட்டு சுற்றுப் பயணி மாரவர்மன் குலசேகரன் என்ற பாண்டிய மன்னன் 1200 கோடி பொன்னைச் சேமித்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொலைத் தண்டனை பெற்ற கைதிகள் முத்து குளித்தலில் ஈடுபடுத்தப்பட்டனர். வாணிபத்தின் பொருட்டு இங்கு வந்த அரேபியர்கள் இங்கே தங்கள் சமயத்தை பரப்பினர். பாண்டிய மன்னனின் அரசவையில் இஸ்லாமியர் சமயத்தைச் சார்ந்த அமைச்சர் ஒருவர் இடம் பெற்றிருந்தார். பாண்டியர்களின் கொற்கை துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பெருமளவில் நிகழ்ந்தது. மணிக்கிராமம், அஞ்சு வண்ணத்தார் என்ற வணிகச் சங்கங்களும் நானாதேசிகன் என்ற பெயரில் அயல்நாட்டு வாணிபம் மேற்கொண்ட குழுவும் இருந்தன. அரேபிய நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி பெருமளவில் நிகழ்ந்தது. இது குறித்து வசப் என்ற அரேபியர் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

""அந்தக் குதிரைகள் வந்து இறங்கியதும்,

அவற்றிற்குப் பச்சை வாற்கோதுமையைத் தருவதற்கு மாறாக, வறுத்த வாற்கோதுமையையும் வெண்ணெய் சேர்த்துச் சமைத்த தானியத்தையும் தீனியாகப் போட்டுக் காய்ச்சிய ஆவின் பாலைக் குடிப்பதற்குக் கொடுக்கிறார்கள். இது மிகவும் விசித்திரமான செயல். லாயத்தில் அடித்து, குதிரைகளை அவற்றோடு கயிற்றால் பிணைத்து, அங்கேயே அவற்றை 40 நாள் விட்டு விடுகிறார்கள். அதனால் குதிரைகள் கொழுத்துப் பருத்துப் போகின்றன. பின்னர், அவற்றிற்குப் பயிற்சியளிக்காமலும் அங்கவடி முதலிய குதிரைச் சாமான்களைப் பூட்டாமலும், அவற்றின் மீது ஏறியுட்கார்ந்து இந்திய வீரர்கள் அவற்றைப் பிசாசைப் போல் ஓட்டுகிறார்கள். அவற்றின் வேகம் புரக்கின் வேகத்திற்குச் சமமாயிருக்கிறது. மிகுந்த வலிமையும் வேகமும் சுறுசுறுப்பும் உடைய புதிய குதிரைகளும் வெகு விரைவில் வலிமையற்ற, வேகமற்ற, பயனற்ற, மதியற்ற குதிரைகளாய் மாறிவிடுகின்றன. அதாவது, அவை எதற்கும் உதவாத இழி நிலையை எய்திவிடுகின்றன. சாட்டையடி வாங்காமலே மிக வேகமாக ஓடக்கூடிய வலிமைமிக்க அந்தக் குதிரைகள் இந்நாட்டுத் தட்பவெப்ப நிலையைத் தாங்க மாட்டாமல் வலியிழந்து வாடிப் போகின்றன. அதனால் ஆண்டுதோறும் புதிய குதிரை களை வாங்குவது இன்றியமையாததாகி விடுகின்றது. எனவே ஆண்டுதோறும் முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் மாபாருக்குக் குதிரைகளைக் கொண்டு வருகிறார்கள். குதிரைக்கு லாடம் கட்டுபவர்களும் இங்கே இல்லை. குதிரை வணிகர்கள் இலாடக்காரர்களை அழைத்துக் கொண்டு வருவதில்லை. லாடக்காரர் யாதேனும் வர முயன்றாலும் அவர்களை வணிகர்கள் தடுத்து விடுகிறார்கள். அப்படிச் செய்யாவிட்டால் குதிரை வாணிகம் குறைந்து போகுமென்று அவர்கள் அஞ்சினார்கள். அந்த வாணிகத்தில் அவர்களுக்கு ஆண்டுதோறும் பெரும் பொருள் கிடைத்தது. அந்த லாபத்தை இழப்பதற்கு அவர்கள் விரும்பவில்லை. குதிரைகளை அவர்கள் கப்பலில் ஏற்றிக் கொண்டு வந்தார்கள் என்று மார்கோ போலோ குறிப்பிட்டுள்ளார்.

விஜயநகர பேரரசு (கி.பி. 14- 16)

பாண்டியர் ஆட்சியின் இறுதிக் காலத்தில் அடுத்தடுத்து வடஇந்திய இஸ்லாமியர்களின் படை யெடுப்புக்கு ஆளானது. கி.பி. 1311-இல் மாலிகாபூரும், 1318-இல் குஷ்ருகானும், 1332-இல் முகமது பின் துக்ளக்கும் படையெடுத்தனர். துக்ளக் பரம்பரையினரின் ஆட்சி டெல்லியில் நிலவியபோது அதன் 23-வது மாநில மாக தமிழகம் (தென்னிந்தியா) ஆனது.  1378 வரை இந்நிலை நீடித்தது. கி.பி. 1378-இல் விஜயநகரப் பேரரசை நிறுவிய இரு சகோதரர்களில் ஒருவராகிய புக்கன் என்பவனின் மகன் குமாரகம்பனன் என்பவன் மதுரையின் மீது படையெடுத்து விஜயநகரப் பேரரசின் ஆட்சியை நிறுவினான். இதன்பின் தமிழகம் விஜயநகரப் பேரரசின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டில் மறைந்து போன சோழப் பேரரசின் ஆட்சிமுறையே பெரும் பாலும் பாண்டியர் ஆட்சியில் தொடர்ந்தது. ஆனால் விஜயநகரப் பேரரசு புதிய ஆட்சியமைப்பையும், நிறுவனங்களையும் தோற்றுவித்தது. மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர் என நான்கு மண்டலங்கள் உருவாயின.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...