வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

மரபை மீறும் மரபணு மாற்றம் :அச்சத்தில் விவசாயிகள் 2013 Socking News


1980களில், ஒரே இனத்தைச் சேர்ந்த இரு தாவரங்களின் மரபணுவை சேர்த்து ஒட்டுமுறை தாவரம் உருவாக்கப்பட்டு வந்தது. ஒரு எலுமிச்சையின் மரபணுவை மற்றொரு எலுமிச்சை ரகத்துடன் சேர்த்து உருவாக்குவது ஒட்டுமுறை. ஆனால், அதே எலுமிச்சையை அதற்கு தொடர்பில்லாத வேறொரு தாவரம் அல்லது உயிரினத்துடன் இணைத்து உருவக்கப்படுவதே மரபணு மாற்றப் பயிர். இது சம்பந்தப்பட்ட தாவரத்தின் இயல்பையே மாற்றிவிடும்.
பருத்தி, கத்தரிக்காய் என தொடங்கி அனைத்து தாவரங்களும் மரபணு மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டால், அவற்றை விளைவிக்கும் நிலங்களுக்கும் உட்கொள்ளும் மனிதர்களுக்கும் பெரும் பாதிப்புகள் உருவாகும் என இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, ஆரஞ்சுப் பழத்திற்கு தவளையின் மரபணுவை இணைத்து பளபளப்பை கூட்டுவதாகவும் குற்றச்சாட்டு உண்டு.
இதுகுறித்து முறையாக பரிசோதிக்கப்பட்டதாக பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்கள் கூறினாலும், அத்தகைய ஆய்வுகள் குறித்து வெளிப்படையாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விதைகளை விற்பதன் மூலம் அதன் மொத்த சந்தையும் அமெரிக்காவின் மான்சான்டோ நிறுவனத்திடம் சென்றுவிடும் என குற்றம்சாட்டப்படுகிறது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பான உயிரி தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய வரைவு மசோதாவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மரபணு மாற்றப் பயிர்களை அனுமதிப்பது தொடர்பாக புதிய சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதன் மூலம் தேசிய அளவில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த மசோதாவில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
இதோ உங்கள் பார்வைக்கு:
உயிரித் தொழில்நுட்ப ஒழுக்காற்று ஆணைய சட்ட மசோதாவை நிறைவேற்ற கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசு முயற்சித்து வருகிறது. கடந்த 22ஆம் தேதி மக்களவையில் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி, இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி வாசுதேவ் ஆச்சார்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
உணவுப் பொருள் தேவை அதிகரிப்பதை கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த மசோதா, மரபணு மாற்ற பயிர்களை இந்தியாவில் அனுமதிப்பது குறித்த விதிமுறைகளை உள்ளடக்கியது. குறிப்பாக மரபணு மாற்ற பயிர்களை அனுமதித்தல், அதன் தன்மைகளை ஆய்வு செய்தல், பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை கண்காணிக்க உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையம் உருவாக்கப்படும். இந்த ஆணையம், மரபணு மாற்ற பயிர்கள் குறித்த அனைத்து விவகாரங்களையும் கையாளும். உடல்நல பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளில் முடிவெடுக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.
நீதிமன்றத்தை அணுக முடியாது! மரபணு மாற்ற பயிர்களால் பாதிப்பு ஏற்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது. பிரச்னை எதுவாயினும் உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையத்திடம் தான் முறையிட முடியும்.அதேநேரத்தில் மரபணு மாற்ற பயிரால் பாதிப்பு ஏற்பட்டால், 2 ஆண்டுகளுக்குள் ஆணையத்திடம் முறையிட வேண்டும். அதன்பிறகு பாதிப்பு ஏற்பட்டதாக கூறினால் அந்த கோரிக்கை ஏற்கப்பட மாட்டாது. மரபணு மாற்ற தொழில்நுட்ப பிரச்னையில் நாட்டிலுள்ள எந்த நீதிமன்றமும் தண்டனை வழங்க முடியாது. ஆணையம் அளிக்கும் தீர்ப்பை ரத்து செய்யவும் நீதிமன்றங்களுக்கு அதிகாரமில்லை. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழும் தகவல்களைப் பெற முடியாது.
விவசாயம், வனம், மீன்வளம், உடல்நலம், கால்நடை, சுற்றுச்சூழல் என தனித்தனி துறைகளில் ஒழுங்காற்றுப் பிரிவுகளை அமைக்க இந்த மசோதா வழி செய்கிறது. மரபணு மாற்றப் பயிர்களால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே ஆராய தனி குழு ஒன்றும் ஏற்படுத்தப்படும் என சட்ட மசோதா கூறுகிறது.
மரபணு மாற்ற பயிர்களை அனுமதிக்கும் இந்த மசோதா, முழுக்க முழுக்க அறிவியல் தொழில்நுட்பத்துறையை சார்ந்தது. இதில் வேளாண்துறைக்கோ, சுற்றுச்சூழல் துறைக்கோ எந்த தொடர்பும் இல்லை. தற்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த உயிரித்தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணைய மசோதா மீது விவாதம் நடத்தப்படும். அப்போது உறுப்பினர்கள் தெரிவிக்கும் திருத்தங்களை கருத்தில்கொண்டு, மசோதா திருத்தப்படும். பின்னர் அதனை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்படும்.
உணவே மருந்து என்றார் திருமூலர். ஆனால் இன்று உணவை விஷமாக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக கலக்கத்துடன் குற்றஞ்சாட்டுகின்றனர் விவசாயிகள்.
விவசாயிகள் குரல் ஓங்கி ஒலிக்குமா, மத்திய அரசு செவி சாய்க்குமா, நமக்கும் நம் சந்ததிகளுக்கும் உணவு உணவாகவே கிடைக்குமா இல்லை ஆரஞ்சு தோற்றத்தில் இருக்கும் தவளையை நாம் எதிர்காலத்தில் உண்ண வேண்டியிருக்குமா?!................ மரபணு மாற்றம் வரமா? சாபமா? இப்படி கேள்விகள் நீண்டு கொண்டே செல்கின்றன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...