வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

தமிழ் குட்டி கதை -philosophy tamil story

அரசன் ஒருவனுக்கு ஓர் ஐயம் எழுந்தது – ‘உலகைத் துறந்தவன் உயர்ந்தவனா? உலகியல் கடமைகளை ஒழுங்காகச் செய்யும் இல்லறத்தான் உயர்ந்தவனா?’ என்று. இதற்கு விடை தரும்படி துறவி ஒருவரிடம் அரசன் வேண்டினான். ‘அவரவர் நிலையில் இருவரும் உயர்ந்தவரே’ என்றார் துறவி. ‘இதை நிருபிக்க வேண்டும்’ என்றான் வேந்தன். ‘நிச்சயமாக! என்னோடு வாருங்கள்’ என்றார் துறவி.

வேந்தனும் துறவியும் வேறொரு நாட்டில் நுழைந்தபோது, அங்கே சுயம்வரம் நடப்பதாக அறிந்தனர். சுயம்வர மண்டபத்தை இருவரும் அடைந்தனர். இளவரசி கையில் மணமாலையுடன் நின்றபடி, மண்டபத்தில் வீற்றிருந்த மன்னர்களைப் பார்த்தாள். ஒருவரிடமும் அவள் மனம் மயங்கவில்லை. வேடிக்கை பார்த்த இளம் துறவி ஒருவரின் பேரழகு அவளை ஈர்த்தது.

ஓடிச்சென்று அவன் கழுத்தில் மாலையிட்டாள்.

இளந்துறவியோ மாலையை வீசியெறிந்து விட்டு விரைவாக வெளியேறினான். மனம் நிறைந்த அவனையே மணாளனாக அடைவது என்ற முடிவுடன் இளவரசியும் பின் தொடர்ந்தாள். எந்த நிலையிலும் தன்னால் அவளை ஏற்க இயலாது என்று மறுத்துவிட்டு, அந்த இளந்துறவி நடந்தார். அழுத கண்ணீருடன் இளவரசி இதயம் வருந்த, அங்கேயே நின்றாள். அரசனும் துறவியும் அந்தக் காட்சியைக் கண்டனர். அவர்களது வழிப்பயணம் தொடர்ந்தது.

அடர்ந்த காட்டில் நடந்த இருவரும் ஒரு மரத்தின் அடியில் வந்து நின்றனர். இருவருக்கும் கடுமையாகப் பசித்தது. இரவுக் குளிரில் உடல் நடுங்கியது. மரக்கிளையில் ஒரு குருவி தன் துணையுடனும், மூன்று குஞ்சுகளுடனும் கூடு கட்டி வாழ்ந்து வந்தது.

வேந்தனும் துறவியும் கீழே வாடி நிற்பதை பார்த்த குருவி, பறந்து சென்று சுள்ளிகளைச் சுமந்து வந்து தீ வளர்த்து, முதலில் அவர்களது குளிரைப் போக்கியது. விருந்தினரின் பசியாற்ற விரும்பிய குருவி, ‘என் உடலை அவர்களுக்கு உணவாக்குகிறேன்’ என்று பெண் குருவியிடம் சொல்லிவிட்டு நெருப்பில் விழுந்தது. ஒரு சிறிய குருவியால் எப்படி இருவர் பசி தீரும் என்று சிந்தித்த பெண் குருவி, தன் கணவன் வழியைப் பின்பற்றித் தானும் தீயில் விழுந்தது. ‘நம் பெற்றோருடன், நாமும் வந்த விருந்தினர்க்கு உணவாவோம்’ என்று மூன்று குஞ்சுகளும் நெருப்பில் விழுந்து கரிந்தன.

அரசனும் துறவியும் அந்த அன்பிற் சிறந்த பறவைகளின் பண்பைக் கண்டு வியந்தனர். ‘மன்னா, அவரவர் நிலையில் அவரவர்  உயர்ந்து நிற்க முடியும் என்பதை இப்போது உணர்ந்திருப்பாய். அழகான பெண்ணையும் பேரரசையும் துரும்பென உதறித் தள்ளிய அந்த இளந்துறவி எப்படி உயர்ந்தவனோ, அப்படித்தான் பிறருக்காகத் தம்மைத் தியாகம் செய்த இந்தப் பறவைகளின் இல்லறமும் உயர்ந்தது. ஏற்றுக் கொண்ட நெறியில் இருந்து எள்ளளவும் பிறழாமல் வாழ்வதுதான் முக்கியம்’ என்று விளக்கினார் துறவி.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...