வள்ளுவர் கூறாத அறம்
கள்ளுண்ணாமையில் – சங்க அகப்பாடல்கள்
கள்ளுண்ணாமையில் – சங்க அகப்பாடல்கள்
முனைவர்.சி. கலைமகள், தமிழ் இணைப் பேராசிரியர்,
இராணிமேரி கல்லூரி , சென்னை-4.
“சமண பௌத்த சமய வருகைக்குப் பிறகே பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் கள்ளுண்ணாமை வலியுறுத்தப்பட்டது. சங்கச் சமூகத்தில் கள்ளுண்ணுதலும் , கள்ளைப் பிறருக்குக் குடம்குடமாக மடுத்து அளித்தலும் பழந்தமிழ்ச் சமூகப் பண்பாட்டு மரபாகக் கருதப்பட்டது. அதனால் சங்கச் சமூகத்தில் கள்ளுண்ணாமை அறமாக வலியுறுத்தப்படவில்லை என்ற கூற்று நிலவி வருகிறது 1.
ஆனால், கள்ளுண்ணாமை தனி அறமாகக் கூறப்படவில்லை எனினும் சங்க அக இலக்கியங்கள் அதைச் சமூக வாழ்வியல் ஒழுக்கங்களுள் ஒன்றாக வலியுறுத்துகின்றன. அதுவும் அற இலக்கியங்கள் கூறாத அறக் கருத்துக்களை வலியுத்துகின்றன.
கள்ளுண்ணலும் கள்ளுண்ணாமையும்
புறச்சமயங்கள் புகுந்திராத காலத்தில் கள்ளுண்ணல் இயல்பான வாழ்க்கை நிகழ்வாக இருந்துள்ளது. காடுகளும் கழனிகளும் நிறைந்திருந்த அக்காலத்தில் பூக்களில் பொன் போல் மகரந்தங்களோடு தேனும், பலா, வாழைக் கனிகளில் தேன்சுவையும் நிறைந்திருந்ததால் சுனை நீரிலும்2 குளத்து நீரிலும்3 தேன் வழிந்தோடி நாள்பட்ட கள்ளாக –தேறலாக மாறியதால் – ஓடியதால் கள்ளுண்ணுதல் மிகுதி விளைச்சல் கருதி சங்க வாழ்க்கை நிகழ்வுகளில் ஒன்றாக ஆகிப்போனது.
கள்ளுண்ணல் எந்த மனிதனின் சிறு மூளையையும் செயலிழக்கச் செய்து, அவனுக்கும் அவன் சுற்றத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடிய செயலாகும். கட்டற்ற மிகு ஒழுக்கம் கேட்டிற்கு வழிவகுக்கும். ஆகையால் கேடு தரக்கூடிய கள்ளுண்ணல் நிகழ்வு வாழ்வியல் ஒழுக்கத்திலிருந்து கடியப்பட்டது. இது எல்லாச் சமூகத்திற்கும் உரிய ஒன்று சமண பௌத்தத்திற்கு மட்டும் உரியதன்று.
இயற்கையோடு இணைந்த சங்க கால வாழ்வில் உணவுக்காக உயிர்களைக் கொல்லுதல் வாழ்க்கை நிகழ்வாயினும் உயிர்க்கொலை கடியப்பட்டது ; தலைவியைப் பிரிதல் கடியப்பட்டாலும் வினைவயின் பிரிவு வலியிறுத்தப்பட்டது; பரத்தமைப் பிரிவு இருந்தாலும் பரத்தமை கடியப்பட்டது. போர் வாழ்வியலாக இருந்தாலும் சந்துவித்தல் போற்றப்பட்டது. அது போல மகிழ்வுக்காக கள்ளுண்டாலும் அதனால் வரும் கேடு கருதி. கள்ளுண்ணாமையும் சமூக வாழ்வியல் ஒழுக்கங்கள்ளுள் ஒன்றாக வலியுறுத்தப்பட்டது
No comments:
Post a Comment