நிதாகத் என்ற வார்த்தை வெளிநாட்டு தொழிலாளர்கள் மத்தியில் அதிகம் உச்சரிக்கப்பட்டாலும் அது குறித்து அவர்கள் சற்றே கலக்கமும் அடைந்துள்ளனர் என்பது உண்மையே.
இந்தியாவில் மட்டுமில்லாமல் ஏனைய நாடுகளிலும் இருந்து பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் அதிகம் இடம்பெயரும் நாடாக சவூதி அரேபியா உள்ளது.
அங்கு வேலைக்கு செல்பவர்களில் பல பேர் கடைநிலை ஊழியர்களாகத் தான் செல்கின்றனர். அதுவும் அவர்களின் ஊதியம் 800 ரியால்கள் (சுமார் 12 ஆயிரம் ரூபாய்) என்ற அடிப்படையில் தான் இருக்கும்.
சவூதி அரேபியா என்ற பாலைவனம் இன்று சோலைவனம் போன்று காட்சியளிக்கிறது என்று வர்ணிக்கப்பட்டாலும், அந்த வார்த்தைக்குப் பின்னால் வெளிநாட்டு வாழ் மக்களின் கடுமையான உழைப்பிற்கும் பங்கு உண்டு.
இந்நிலையில் சவூதி அரேபியாவில் கடுமையாக உழைத்து தன் குடும்பத்தினருக்கு பொருளாதாரத்தை அனுப்பிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு மத்தியில் நிதாகத் என்ற ஒற்றைச் சொல் வேலையிழக்கும் சூழல் என்ற பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிதாகத் சட்டம் என்பது உள்நாட்டினருக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட தொழிலாளர் சட்டம் ஆகும். வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் பத்தில் ஒரு பங்கு உள்நாட்டுத் தொழிலாளர்களுக்கு கட்டாயம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்கிறது இந்தச் சட்டம்.
அங்கு பணிபுரியும் வெளிநாட்டு வாழ் தொழிலாளர்கள் பல பேர் கடைநிலை ஊழியர்களாகத்தான் உள்ளனர். பல பேர் சூப்பர் மார்க்கெட் போன்ற வர்த்தக தலங்களில் கடை நிலை ஊழியர்களாகவும், சாலை செப்பனிடுதல் போன்ற வேலைகளும், வாகன ஓட்டுனர், வீட்டு பராமரிப்பு போன்ற வேலைகளில்தான் உள்ளனர். குறிப்பாக கட்டிட வேலைகளில் தான் அதிகம் பேர் பணிபுரிகின்றனர்.
சவூதி நாட்டில் அடிக்கும் வெயிலின் தாக்கம் அங்கு பணி புரிபவர்களுக்கு மட்டும் தான் தெரியும். இந்த கடுமையான வெயிலில் பணிபுரிய சவூதி இளைஞர்கள் தயாராக இருப்பார்களா என்றால் இல்லை என்ற பதில் தான் வரும். இதன் அடிப்படையில் பார்த்தாலும் கூட கடைநிலை ஊழியர்களுக்கு பாதிப்பு மிக குறைவென்றே தெரிகிறது. மேலும் பெரிய நிறுவனங்கள் நல்ல திறமை வாய்ந்த தொழிலாளர்களை இழக்கவும் தயாராக இருக்காது.
இந்தச் சட்டம், நிறுவனங்களை சிறிய, நடுத்தர, பெரிய, மிகப்பெரிய அதாவது புளூ, யெல்லோ, கிரீன், ரெட் என நான்கு ஸோன்களாக பிரித்துள்ளது. உதாரணத்திற்கு 40 சதவீத சவூதி மக்கள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தால் அது புளூ ஸோன் என கணக்கிடப்படுகிறது. அதே போல் கிரீன் ஸோன் என்பது 12 முதல் 39 சதவீதமும், யெல்லோ ஸோன் என்பது 6 முதல் 11 சதவீதமும், ரெட் ஸோன் என்பது 0 முதல் 5 சதவீதமும் ஆகும்.
புளூ ஸோன் நிறுவனங்களில் பணிக்குச் சேரும் தொழிலாளர்களுக்கான விசா நடைமுறைகள் எளிதானதாக உள்ளது. மேலும், இந்த நிறுவனங்கள் இதற்கு அடுத்த நிலையில் உள்ள யெல்லோ மற்றும் ரெட் ஸோன் நிறுவனங்களில் இருந்தும் பணியாளர்களை அழைத்துக் கொள்ள சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் செயல்படாத நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யவும் அரசுக்கு அதிகாரம் உண்டு. பத்து தொழிலாளர்கள் வரை பணி அமர்த்தியுள்ள சிறு நிறுவனங்களுக்கு இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வெளியேற காலக் கெடு...
வெளிநாட்டு வாழ் தொழிலாளர்கள் வெளியேற அந்நாட்டு அரசு மேலும் சில மாதங்களை அவகாசமாக அறிவித்துள்ளது. இதனால் 75 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் கணக்கின் படி உத்தரப் பிரதேசத்தில் இருந்து 25000 தொழிலாளர்களும், கேரள மாநிலந்த்தில் ஐந்தாயிரம் தொழிலாளர்களும், தமிழகம் மற்றும் ஆந்திராவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் நாடு திரும்புவார்கள் என தெரிகிறது.
காலக்கெடுவுக்குப் பிறகும் நாட்டை விட்டு வெளியேறாமல் இருந்தால், கைது செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. எனவே, தூதரகத்தில் அவசரச் சான்றிதழ் ( எமர்ஜென்ஸி சர்டிபிகேட்) பெற்று தாயகம் திரும்ப, அதிகமான இந்தியர்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் பஷீர் அகமதுஅவர்களிடம் கருத்து கேட்டதில் ,
உள்நாட்டினருக்கு வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக சவூதி அரேபியா இந்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கூட இதே மாதிரியான சட்டம் அந்தந்த நாட்டிற்கு ஏற்றவாறு உள்ளது. ஆனால் ஏற்கனவே கொண்டு வந்த இந்தச் சட்டத்தை சவூதி அரசாங்கம் தற்போது தீவீரப்படுத்தியுள்ளது.
நிதாகத் சட்டத்தால் வெளிநாட்டு தொழிலாளர்களின் நிலை குறித்து.....
முறையான விசா பெற்று அங்கு வேலைக்குச் செல்பவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் ஒரு சிலர் உம்ரா விசாவில் சென்று வேலை பார்ப்பது, தவறான ஏஜென்சிகள் மூலமாகவும், முறையற்ற வழிகாட்டுதல்கள், விசிட் மற்றும் பிசினஸ் விசாக்களில் சென்று வேலை பார்த்தவர்கள் தான் அதிகமான பிரச்னையை சந்திக்கின்றனர்.
இந்திய தொழிலாளர்களின் நிலை குறித்து....
முறையான விசா இருந்தும் வேலையிழந்து நாடு திரும்புபவர்களுக்கு, மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சகத்திடம் முறையிட்டு தேவையான மாற்றுவழி ஏற்படுத்தி கொடுத்திட வலியுறுத்த உள்ளோம். ஏற்கனவே நாங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களின் பணி மற்றும் உயிர் பாதுகாப்பு குறித்து பிரதமரிடம் முறையிட்டோம். இதனை தொடந்து கடந்த ஜனவரி மாதத்தில் கொச்சியில் நடைபெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கூட தீர்மானமாக இதனை நிறைவேற்றினார்கள் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment