கிராமப்புற வங்கிகளில் ஏற்படும் கிளார்க் (அசிஸ்டன்ட்) மற்றும் அதிகாரி வேலைக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் ஐ.பீ.பி.எஸ். பொது எழுத்து தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 25–7–13 கடைசி நாளாகும்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
வங்கிகளில் ஏற்படும் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்யும் அமைப்பாக வங்கிப் பணியாளர் தேர்வாணையம் செயல்படுகிறது. இது ஐ.பீ.பி.எஸ். என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. முதலில் பொதுத்துறை வங்கிகளுக்காக இந்த அமைப்பு பொது எழுத்து தேர்வு நடத்தி வந்தது. கடந்த ஆண்டில் எழுத்து தேர்வுடன் பொது நேர் காணலும் நடத்தியது. ஐ.பீ.பி.எஸ். நடத்தும் பொது எழுத்து தேர்வு முடிவுகளை சில தனியார் வங்கிகள் கூட பயன்படுத்திக் கொண்டன.
இதேபோல கிராமப்புற வங்கிகளுக்கும் பொது எழுத்து தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த 2012–ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் முதல் பொது எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. தற்போது மண்டல கிராமப்புற வங்கிகளுக்கான (ஆர்.ஆர்.பி.) 2–வது பொது எழுத்து தேர்வுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. இது ஆபீஸ் அசிஸ்டன்ட் (கிளார்க்) மற்றும் அதிகாரி (ஆபீசர்) பணிக்கான எழுத்து தேர்வாகும்.
சமீபத்தில்தான் 20 பொதுத்துறை வங்கிகளுக்கான பொது எழுத்து தேர்வு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது கிராமப்புற வங்கிகளுக்கான பொது எழுத்து தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளதால் வேலை தேடும் இளைஞர்களுக்கு இது நல்லதொரு வாய்ப்பாகும். இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள், நாடு முழுவதும் உள்ள 62 கிராமப்புற வங்கிகளில் ஏற்படும் பணியிடங்களுக்கு போட்டியிடலாம்.
2012–ல் நடந்த கிராமப்புற வங்கிகளுக்கான பொது எழுத்து தேர்வில் 84 வங்கிகள் பங்கேற்றன. ஆனால் தற்போது நடைபெறும் 2–வது எழுத்து தேர்வில் 62 வங்கிகளே பங்கு பெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்த பொது எழுத்து தேர்வுக்கு 4–7–13 முதல் 25–7–13 வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள் பற்றிய விவரம் கீழே தரப்பட்டு உள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1–7–13 தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு பின்பற்றப்படும்.
கல்வித்தகுதி :
அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அத்துடன் விண்ணப்பதாரர், வங்கி அமைந்துள்ள மண்டல மொழியில் பேசத் தெரிந்தவராக இருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்
ஆபீசர் (ஸ்கேல் 1, 2, 3) தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஊனமுற்றோர் ரூ.100–ம், மற்றவர்கள் ரூ.600–ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
ஆபீஸ் அசிஸ்டன்ட் (மல்டி பர்பஸ்) பணிக்கு விண்ணப்பிக்கும் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.600–ம், எஸ்.சி, எஸ்.டி. மற்றும் ஊனமுற்றோர், முன்னாள் படைவீரர்கள் ரூ.100–ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை
அசிஸ்டன்ட் மற்றும் ஆபீசர் பணி விண்ணப்பதாரர்கள் பொது எழுத்துத் தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இந்த தேர்வில் தவறான பதில் அளித்தால் மைனஸ் மார்க் வழங்கப்படும். அதாவது தவறான பதிலுக்கு 0.25 மதிப்பெண் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கப்படும். இந்த அட்டையைக் கொண்டு இந்த தேர்வை அனுமதித்த 62 கிராமப்புற வங்கிகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஓராண்டு காலத்திற்கு இந்த மதிப்பெண் அட்டை செல்லும்.அதிக மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்களை வங்கிகள் நேர்காணலுக்கு உட்படுத்தி பணி அமர்த்திக் கொள்ளும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைன், ஆப்லைன் இரு வழிகளிலும் கட்டணம் செலுத்தலாம். கட்டணம் செலுத்திய பின்னர் நிரப்பிய விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய முடியும்.
முக்கிய தேதிகள்
ஆன்லைன் பதிவு ஆரம்பமான நாள் : 4–7–13
விண்ணப்பிக்க கடைசி நாள் : 25–7–13
ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தும் கால அவகாசம் : 4–7–13 முதல் 25–7–13
ஆப்லைன் மூலம் கட்டணம் செலுத்தும் கால அவகாசம் : 6–7–13 முதல் 30–7–13 வரை
அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறும் உத்தேச நாள் : 21–9–13/ 22–9–13
அசிஸ்டன்ட் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறும் உத்தேச நாள் : 28–9–13/29–9–13, 5–10–13/6–10–13
தேர்வு முடிவு வெளியாகும் உத்தேச நாள் : 5–11–13
மேலும் விரிவான விவரங்களை அறியவும், விண்ணப்பிக்கவும் www.ibps.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment